அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டரில் வரும் கார்களை, 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் வெளியிட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர்
ஜாகுவார் சி எக்ஸ்75 க்காக செப் 18, 2015 03:23 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜாகுவார் C-X75 சூப்பர்கார், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆகியவற்றை ஜாகுவார் லேண்ட் ரோவர் காட்சிக்கு வைத்துள்ளது.
ஜெய்ப்பூர்: ஜேம்ஸ்பாண்டின் 24வது திரைப்படமான ஸ்பெக்டரில் பயன்படுத்தப்பட்ட, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்களை, தற்போது நடைபெற்றுவரும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அந்நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. உண்மையில் இந்த வாகனங்கள், பிராங்பேர்ட் மோட்டார் ஷோவிற்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் நையோமி ஹாரிஸ் (மணிபென்னி), டேவிட் பாடிஸ்டா (ஹின்க்ஸ்) மற்றும் பிரிட்டிஷ் பாடகரும், இசைக்கலைஞருமான ஜான் நியூமென் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் அக்டோபர் மாதம், உலகமெங்கும் ஸ்பெக்டர் திரைப்படம் வெள்ளித்திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில், ஜேம்ஸ்பாண்டாக வரும் டேனியல் கிரேக் - ஆஸ்டன் மார்டின் காரிலும், ஹின்க்ஸ் - C-X75 சூப்பர் காரிலும் தோன்றி, ரோம் நகரின் வீதிகளில் இருவருக்கும் இடையிலான ஒரு சீறி பாயும் அசுரவேக துரத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதேபோல ஆஸ்திரியாவில் எடுக்கப்பட்ட சில முக்கியமான சண்டைக் காட்சிகளில், சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்ட வெறித்தனமான 37-இன்ச் டையமீட்டர் ஆப்-ரோடு டயர்களை கொண்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் லேண்ட் ரோவர் கார்களில் இதுவரை இல்லாத வேகமும், அதிக சக்தி வாய்ந்ததுமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR ஆகிய கார்கள் இடம் பெற்றுள்ளன. மேற்கூறிய எல்லா வாகனங்களும், ஜாகுவார் லேண்ட் ரோவரின் சிறப்பு செயல்பாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்டது ஆகும்.
இது குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் சிறப்பு செயல்பாட்டு பிரிவின் நிர்வாக இயக்குனர் ஜான் எட்வர்ட்ஸ் கூறுகையில், “உலகிலேயே மிக பிரபலமான திரைப்படத்தின் ஒரு பகுதியாக, ஜாகுவார் லேண்ட் ரோவரின் சிறப்பு மிகுந்த வாகனங்கள் மீண்டும் அணிவகுக்க கிடைத்த, இந்த வாய்ப்பை எண்ணி நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் கொண்ட கார்களை ஒருமிக்க காட்சிக்கு வைக்க, இது எங்களுக்கு கிடைத்த ஒரு எதிர்பாராத வாய்ப்பாகும். இந்த சிறந்த நட்புறவை எதிர்காலத்திலும் தொடர விரும்புகிறோம்” என்றார்.
ஸ்பெக்டர் திரைப்படத்தில் மணிபென்னி என்ற கதாபாத்திரத்தில் வரும் நையோமி ஹாரிஸ் கூறுகையில், “பாண்ட் உடனான அறிமுகத்தில், நான் டிஃபென்டர் காரில் வருகிறேன். மேலும் இஸ்தான்புல் பகுதியில் இந்த காட்சியை படமாக்கிய போது நடந்த பல சம்பவங்களும், எனக்கு மலரும் நினைவுகளாக உள்ளன. ஒரு சிறப்பு வேடம் மூலம் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதும், ஜாகுவார் லேண்ட் ரோவர் அணியுடன் சேர்ந்து பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பையும் நான் எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது” என்றார்.
இது குறித்து நடிகர் டேவிட் பாடிஸ்டா கூறுகையில், “பாண்ட் படத்தின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துரத்தும் காட்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததும், C-X75 சூப்பர் காரை ஓட்டியதையும் நினைத்தால், என் வாழ்க்கையின் கனவு, நிஜமானது போல தோன்றுகிறது. திரைப்பட வரலாற்றிலேயே, ஒரு அழகான மிருகத்தன்மை கொண்ட காராக இது விளங்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.