பஜாஜ் க்யூட் RE60 மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது: விரைவில் அறிமுகம்
இருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம், முதல் முறையாக பஜாஜ் க்யூட் RE 60 என்னும் க்வாட்ரிசைக்கிளைத் (சிறிய ரக 4 சக்கர வாகனம்) தயாரித்து வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த வாகனம், மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. புதிய RE60 நான்கு சக்கர வாகனம், இந்த முறை ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில், சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டதால், இதன் அறிமுக தேதி மிக அருகில் வந்து விட்டது என்று தெரிகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் உலக சந்தையில் இந்த வாகனத்தை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை. க்யூட் RE60 வாகனத்தின் தயாரிப்பு முழுமையடைந்துள்ளதை, வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பிரத்தியேக புகைபடங்கள் தெளிவாக காண்பிக்கின்றன. தற்போது ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களில் உள்ளதைப் போல, இந்த குட்டி கார் பலவித கலர் ஆப்ஷங்களில் வரும். சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் நாம் இந்த வாகனத்தின் நீலம் மற்றும் சிகப்பு நிறங்களை மட்டுமே பார்க்க முடிந்தாலும், இந்த இரண்டு நிறங்களுடன் நிறுத்தி விடாமல், பலவித கலர் ஆப்ஷங்களுடன் இந்த கார் வெளியிடப்படுவது உறுதி. ஏனெனில், இதற்கு முன்பு வேவு பார்க்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தில், அழகிய மஞ்சள் வண்ணத்தில் க்யூட் RE60 வெளியானதை நாம் மறக்க முடியாது.
பஜாஜ் நிறுவனம் தனது க்யூட் RE60 மாடலை, ஆரம்பத்தில் கடல் கடந்து 16 வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது மட்டுமல்ல, முதல் முதலில் துருக்கி நாட்டில், இந்த குட்டி காரை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில் சிறப்பு செய்தி என்னவென்றால், இந்த க்வாட்ரி சைக்கிள் ஐரோப்பிய க்வாட்ரி சைக்கிள் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பிய WVTA (ஹோல் வெகிக்கில் டைப் அப்ரூவல்) சான்றிதழ் பெற்ற முதல் க்வாட்ரிசைக்கிள் என்ற பெருமையை பஜாஜ் க்யூட் RE 60 தட்டிச் செல்கிறது.
இந்தியாவின் முதல் க்வாட்ரிசைக்கிளான பஜாஜ் க்யூட் வாகனத்தை இயக்க, 217cc DTSi இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இஞ்ஜின், 13.5 PS என்ற அளவில் சக்தி மற்றும் 19.6 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. லிட்டருக்கு 36 கிலோ மீட்டர் ஓடும் வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதால் மேலும் ஒரு சபாஷைப் பெறுகிறது. ஏனெனில், பொதுவாக இந்த வகை வாகனங்களின் சிறப்பம்ச பட்டியலில் எரிபொருள் சிக்கனம் இடம்பெறுவதில்லை. மேலும், இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 70 kmph வேகத்தில் செல்ல முடியும். யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது போல, பஜாஜ் நிறுவனம் தனது புதிய க்வாட்ரிசைக்கிளை பெட்ரோல், CNG மற்றும் LPG என்ற 3 வித வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்ய, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்காக காத்திருப்பதால், இதன் விலை பற்றிய செய்தியை இந்நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இதன் விலை ஏறத்தாழ ரூ. 2 லட்சங்கள் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க அறிமுகம் செய்ய தயாராக உள்ள பஜாஜ் RE60 குவாட்ரிசைக்கிள் உளவுப்படங்களில் சிக்கியது