நவம்பர் மாத விற்பனை: மஹிந்த்ரா, ஹுண்டாய், மாருதி மற்றும் டொயோடா விற்பனை உயர்ந்தது; ஹோண்டா சரிவை சந்தித்தது
தற்போது, இந்திய ஆட்டோமொபைல் துறையில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே உள்ள கார் பிரிவுகளில் இந்த ஆண்டு மட்டும் ஏராளமான புதிய படைப்புகள் வெளிவந்துள்ளன. அது தவிர, புதிதாக காம்பாக்ட் SUV மற்றும் மினி SUV பிரிவு போன்ற பலவகை புதிய பிரிவுகளும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. கார்களின் விலையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று விலையில் இணைகின்றன. இத்தகைய போட்டி மிகுந்த வாகனச் சந்தையில், தனியொரு இடத்தைப் பிடிக்க, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சிறப்பானதொரு ஸ்ட்ராடஜி தேவைப்படுகிறது என்பதே உண்மை.
மஹிந்த்ராவின் SUV ஃபார்முலா, அவர்களுக்கு சரியான விதத்தில் வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருகிறது என்று தெரிகிறது. ஏனெனில், இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 36 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹுண்டாய் மற்றும் மாருதி நிறுவனமும் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன, ஏனென்றால், அவற்றின் விற்பனை வளர்ச்சி, 23 சதவிகிதம் மற்றும் 9.7 சதவிகிதம் என்ற விகித அளவில், முறையே பதிவு செய்துள்ளன. டொயோட்டா நிறுவனத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு, ஜனவரி முதல் நவம்பர் மாத வரை கணக்கிடப்பட்ட உள்நாட்டு கார் விற்பனையை ஒப்பிடுகையில், இந்த 2015 –ஆம் ஆண்டு விற்பனை, 7 சதவிகிதம் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற்றுள்ளது. அதே நேரம், நவம்பர் மாதத்திய விற்பனையைக் கணக்கிடும் போது, ஹோண்டா நிறுவனம் 3.6 சதவிகித சரிவை எதிர்கொண்டுள்ளது.
மஹிந்த்ரா மஹிந்த்ரா நிறுவனம், 2015 நவம்பர் மாதத்தில் உன்னதமான 36 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். கடந்த வருடத்தில், இதே மாதத்தில் 14,473 கார்களை விற்ற நிலையொடு ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த வருடத்தில் 19,662 கார்களை விற்றுள்ளது என்பது என்பது ஆச்சர்யமான வெற்றியாகும். MM லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆட்டோமோடிவ் பிரிவின் சீஃப் எக்ஸிக்யூடிவான திரு. பிரவீன் ஷா, தங்கள் நிறுவனத்தின் 2015 –ஆம் ஆண்டின் நவம்பர் மாத விற்பனை செயல்திறனைப் பற்றி பேசுகையில், “கடந்த இரண்டு மாதங்களாக, உற்சாகமான பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கார்கள் மற்றும் தற்போதுள்ள மிதமான வட்டி விகிதங்கள் காரணமாக, இப்போது வாகன தொழில் அருமையான வளர்ச்சி பெற்றுள்ளது. விரைவில் GST (பொருட்கள் மற்றும் சேவை வரி) அமலாக்கப்பட்டதும், அது மிகவும் சாதகமாக அமைந்து, போட்டி மிகுந்த இந்திய வாகன சந்தையில் ஒரு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். TUV 300 கார் போன்ற புதிதாக அறிமுகமான எங்களின் கார்கள், மற்றும் ஏற்கனவே உள்ள போலேரோ, ஸ்கொர்பியோ மற்றும் XUV 500 போன்ற கார்களின் வளர்ச்சி போன்றவை, மஹிந்த்ரா நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளன. எங்களது ஏற்றுமதி வளர்ச்சியும் எங்கள் உற்சாகத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது, ஏனெனில், நடப்பு நிதியாண்டில், எங்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த வளர்ச்சி 28 சதவிகிதமாக உள்ளது. 2015 நவம்பர் மாத இறுதியில் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருப்பது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது,” என்று கூறினார்.
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின் படி, இந்த நிறுவனம் 2015 நவம்பர் மாதத்தில் 54,290 கார்களை விற்றுள்ளது. இந்த வருடம், விற்பனை விகிதம் 23 சதவிகிதம் அதிகமாக பதிவாகி, 43,651 கார்கள் அதிகமாக விற்பனை ஆகி உள்ளன. ஹுண்டாய் கார்களின் இந்திய தேவை அதிகரித்திருந்தாலும், ஏற்றுமதி வளர்ச்சி சரிவை சந்தித்திருக்கிறது. ஏற்றுமதியின் அளவு, 25.4 சதவிகிதம் குறைந்துள்ளது, ஏனெனில், கடந்த வருடத்தில் இதே சமயத்தில், 18,779 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன, ஆனால் இந்த வருடம் 14,010 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. HMIL நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான (சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங்) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா இது பற்றி கூறும் பொது, “உள்நாட்டு விற்பனையில், ஹுண்டாய் நிறுவனம் ஒட்டுமத்தமாக 4 மில்லியன் கார்களை விற்று ஒரு சாதனை செய்துள்ளது, உண்மையில், இந்த ஒரு மாதத்தில் மட்டும் 43,651 கார்களை விற்று எங்களது செயல்திறனை நிரூபித்துள்ளோம். புதிய யுகத்துக்கான இளமை துள்ளும் எங்களது கார்களின் பட்டியலில் உள்ள கிரேட்டா i20, கிராண்ட் i10 மற்றும் அருமையான பண்டிகை காலம் ஆகியவை இணைந்து, வலுவான டிமாண்ட்டை உருவாக்கியதால், கடந்த வருடத்தை விட 23 சதவிகிதம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளோம்,” என்று குதூகலமாகக் குறிப்பிட்டார்.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் இந்த நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனை 9.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம், நவம்பர் மாதம் விற்பனையான 1,10,147 கார்களை ஒப்பிடும் போது, இந்த வருட நவம்பர் மாதத்தில், 1,20,824 கார்களை விற்று வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
டொயொட்டோ நிறுவனமும், தனது ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியை 7 சதவிகிதம் அதிகப்படுத்தி உள்ளது. அதாவது, கடந்த வருடம் ஜனவரியில் இருந்து நவம்பர் வரை 1,21,038 கார்களை விற்ற இந்நிறுவனம், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் வளர்ச்சியைப் பாதையில் சென்று 1,29,373 கார்களை விற்றுள்ளது. இந்நிறுவனத்தின் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் பிரிவு டைரக்டர் மற்றும் சீனியர் வைஸ்-பிரெஸிடெண்ட்டான திரு. N. ராஜா அவர்கள், விற்பனையைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, “இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த வருடத்தின் ஜனவரியில் இருந்து நவம்பர் மாதம் வரை ஒப்பிடும் போது, 2015 –ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில், எங்கள் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி, 7 சதவிகிதமாக இருக்கிறது. எங்களது எடியோஸ் ரக கார்களின் விற்பனையில் மட்டும், கடந்த ஜனவரியில் இருந்து நவம்பர் மாதம் வரை இருந்த விற்பனையை ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதே நேரத்தில் நடந்த ஒட்டுமொத்த விற்பனை, 9 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. பண்டிகை காலத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய புதிய லிவா கார் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது; தொடர்ந்து காம்ரி காரின் விற்பனை எண்ணிக்கை வளர்ந்து, 1000 கார்களுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு அடிவாரமாக உள்ள எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு, எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு வாகனத்தின் வெற்றியும், எங்களின் இந்த மாத ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளது,” என்று உவகை பொங்க கூறினார்.
ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 3.6 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2014 –ஆம் வருட நவம்பர் மாதம் 15,263 கார்களை விற்ற ஹோண்டா, இந்த வருடம் சற்றே குறைவாக 14,712 கார்கள் மேட்டுமே கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பார்த்தால், ஹோண்டா நிறுவனம் 13 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2015 ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 1,32,095 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தை விட, இந்த வருடம் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி உறுதியாக உள்ளது.
இதையும் படியுங்கள்