இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹுண்டாய் டக்சன்
published on பிப்ரவரி 03, 2016 01:53 pm by akshit for ஹூண்டாய் டுக்ஸன் 2016-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டக்சன் SUV காரை, தற்போது நடந்து கொண்டிருக்கும் IAE 2016 கண்காட்சியில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னர், நமது இந்திய ரோடுகளில் இந்த வாகனம் ஓடிக் கொண்டிருந்ததை நாம் மறக்க முடியாது. அன்றைய தினத்தில், இந்த காருக்குப் பெரிய வரவேற்பு இல்லாததால், இதன் விற்பனை கைவிடப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை, ஏனெனில், பெரும்பாலான மக்கள் இப்போது காம்பாக்ட் SUV பிரிவு கார்களையே வேண்டி விரும்பி வாங்குகின்றனர். எனவே, தற்போது அதிக உற்சாகத்துடனும், வெற்றி பெறவேண்டும் என்ற வைராக்கியத்துடனும், இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகி உள்ள புதிய டக்சன், நிச்சயமாக ஏராளமான இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய ஹுண்டாய் டக்சன் மாடல், கடந்த வருட ஜெனீவா மோட்டார் ஷோ கண்காட்சியில் முதல் முறையாக வெளியிடப்பட்டது. ஹுண்டாய் கிரேட்டா மாடல் வெளியாகி மாபெரும் வெற்றியை சந்தித்த பின்னர், தனது அடுத்த தயாரிப்பான டக்சன் காரை இந்தியா உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி, மேலும் ஒரு பெரிய வெற்றிக்கு ஹுண்டாய் நிறுவனம் வித்திட்டுள்ளது. உண்மையில், ஹுண்டாய் கிரேட்டா மற்றும் சாண்டா ஃபே ஆகிய கார்களுக்கு மத்தியில் உள்ள பெரிய இடைவெளியை இந்த கார் நீக்கும்.
புதிய 2016 டக்சன், நவீன வடிவத்தைப் பெற்று அனைவரையும் வசீகரிக்கிறது. முன்புறத்தில் அறுங்கோண வடிவத்தில் உள்ள கிரில் பகுதியில் இடம்பெற்றுள்ள டூயல் புரொஜெக்டர் LED ஹெட் லாம்ப்கள் மற்றும் காலையிலும் பளிச்சென்று எரியும் LED விளக்குகள் (DRLs) போன்றவை இதன் நவீன வடிவமைப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. மேலும், மிகப் பெரிய வீல் ஆர்ச் மற்றும் 19 அங்குல அலாய் சக்கரங்கள் இதன் பக்கவாட்டுத் தோற்றத்தை அலங்கரிக்கின்றன. பின்புறத்தில், ராப்-அரௌண்ட் LED டெய்ல் லாம்ப்கள், க்ரோம் வேலைப்பாடுகள் அமைந்த எக்ஸாஸ்ட் பைப் மற்றும் சற்றே உயரத்தில் உள்ள ஸ்பாய்லர் போன்றவை கச்சிதமாகப் பொருத்தப்பட்டு, இதன் தோற்றப்பொலிவை மேலும் மெருகேற்றுகின்றன.
புதிய மிடில் சைஸ் SUV காரான டக்சன் மாடலின் தோற்ற மேம்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தொழில்நுட்ப மேம்பாடுகளிலும் ஹுண்டாய் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஸ்மார்ட் ஃபோன் மற்றும் புளுடூத் இணைப்புகளைக் கொண்ட 8 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் கருவி, கண்ணைக் கவரும் சன்ரூஃப், மேம்படுத்தப்பட்ட AC மற்றும் ஆட்டோ பார்க்கிங் வசதி போன்றவை, இந்த காரின் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்குச் சான்றாக உள்ளன. அதுமட்டுமல்ல நண்பர்களே, பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த கார் சிறப்பான அம்சங்களைப் பெற்று அசத்துகிறது. ஆறு பாதுகாப்புக் காற்றுப் பைகள், EBD அமைப்பு இணைந்த ABS, பிளைண்ட் ஸ்பாட்களில் உள்ள வாகனங்களைக் கண்டறிந்து எச்சரிக்கை தரும் தொழில்நுட்பம், ஸ்டியரிங் வீலைத் திருப்பும் போது எரியும் ஸ்டாட்டிக் கார்னரிங் லைட்கள், தனது லேனில் இருந்து விலகும் போது எச்சரிக்கும் லேன் டிபார்ச்சர் வார்னிங்க், அட்டானமஸ் எமர்ஜென்ஸி ப்ரேக் அமைப்பு மற்றும் மேலும் பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் இணைந்துள்ளதால், இந்த கார் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது. இவை அனைத்தையும் மிஞ்சிவிடும்படி மற்றுமொரு நற்செய்தி உள்ளது. அதாவது, இந்த கார் ஐரோப்பிய NCAP பாதுகாப்பு சோதனைகளில் தேறி, 5 நட்சத்திர மதிப்பீடைப் பெற்றுள்ளது.
புத்தம் புதிய ஹுண்டாய் டக்சன் மாடல், டீசல் மற்றும் பெட்ரோல் என்று இரண்டு விதமான இஞ்ஜின் ஆப்ஷங்களைப் பெற்று வருகின்றது. இதன் 2.0 லிட்டர் CRDi இஞ்ஜின், 182.5 bhp சக்தி மற்றும் 420 Nm டர்க்கையும் உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், இதன் 1.7 லிட்டர் CRDi புளூ ட்ரைவ் இஞ்ஜின், 114 bhp சக்தி மற்றும் 280 Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும், இந்த இஞ்ஜின்கள் 6 ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. FWD (ஃப்ரண்ட் வீல் ட்ரைவ்) அல்லது AWD (ஆல் வீல் ட்ரைவ்) என்ற இரண்டு விதமான அமைப்புகளில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உலகம் முழுவதும், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெஹிக்கில் பிரிவு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, ஹுண்டாய் நிறுவனம் தக்க தருணத்தில் இந்த காரை வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க 2016 ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரவுள்ள தயாரிப்பு வரிசையை ஹூண்டாய் வெளியிட்டது!
0 out of 0 found this helpful