ஹுண்டாய் இந்தியாவின் டிசம்பர் மாத விற்பனை வளர்ச்சி 8 சதவிகிதம்
published on ஜனவரி 05, 2016 01:54 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹுண்டாய் இந்தியா நிறுவனம், டிசம்பர் மாத விற்பனையில் 7.98 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது பாராட்டுதலுக்குரிய செய்தி ஆகும். 2014 -ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், 59,391 கார்களை விற்ற இந்த தென் கொரிய கார் தயாரிப்பாளர், இந்த முறை 64,135 கார்களை விற்று போற்றுதலுக்குரிய சாதனை படைத்துள்ளார். 2015 டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியானது சிறப்பாக இருந்தாலும், உள்நாட்டு சந்தையில் இதன் வளர்ச்சி அதை விட சுவாரசியமாக இருந்தது, ஏனெனில், 2014 –ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், 32,504 கார்களை உள்நாட்டு சந்தையில் விற்ற இந்த நிறுவனம், 2015 –ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 41,861 கார்களை விற்றுள்ளது, அதாவது இது 28.78 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது.
உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் சக்கை போடு போட்டாலும், டிசம்பர் மாத சர்வதேச விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது வருத்தத்திற்குரிய உண்மை. ஹுண்டாயின், 2014 –ஆம் வருட டிசம்பர் மாதத்தின் ஏற்றுமதி எண்ணிக்கை 26,887 கார்களாக இருந்தது. ஆனால், 2015 டிசம்பர் மாதத்தின் ஏற்றுமதி எண்ணிக்கை குறைந்து, 22,274 கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்றுள்ளது. ஏற்றுமதி சரிவிற்கு காரணத்தையும் நம்மால் விளக்க முடியும். இந்திய சந்தையில் கிரேட்டா மாடலுக்கு உருவாகியுள்ள அபரிதமான ஆர்வம், இந்த நிறுவனத்தை சர்வதேச சந்தையில் கவனம் செலுத்த விடாமல், உள்நாட்டிலேயே தனது மொத்த கவனத்தையும் செலவிடச் செய்துள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனம் ஏற்றுமதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஹுண்டாய் இந்தியாவின் சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் பிரிவின் வைஸ்-பிரெஸிடெண்ட்டான திரு. ராகேஷ் ஸ்ரீவஸ்தவா அந்த விழாவில் பேசும் போது, கிராண்ட் i10, எலைட் i20 மற்றும் கிரேட்டா போன்ற கார்களின் உறுதியான செயல்திறன்தான், டிசம்பர் மாதத்தில் நடந்த அதிக விற்பனைக்கு மூல காரணம் என்று கூறினார்.
2015 ஆண்டுக்கான அதிகப்படியான முன்பதிவுகளைப் பெற்ற நிறுவனமாக ஹுண்டாய் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே நேரத்தில், விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 4.65 லட்சங்கள் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதே ஹுண்டாயின் 2015 -ஆம் ஆண்டுக்கான விற்பனை இலக்காக இருந்தது, ஆனால் அதையும் தாண்டி 4.76 லட்சங்கள் கார்களை விற்றுவிட்டது. ஜனவரி மாதத்தில் இருந்து தனது வாகனங்களின் விலை அதிகமாகும் என்று இந்த நிறுவனம் அறிவித்த பின்னர், அதிகமாக செலவளிக்க விருப்பம் இல்லாதவர்கள் 2015 –ஆம் ஆண்டிற்குள் தங்களுக்கான வாகனங்களை வாங்கிவிட்டனர் என்பது, இந்த அதீத விற்பனை வளர்ச்சியின் மற்றொரு ரகசிய காரணம் ஆகும். சர்வதேச சந்தையில் மிகப் பெரிய வரவேற்பு இல்லாத போதும், உள்நாட்டு விற்பனை அமோகமாக இருந்தாலே ஹுண்டாய் இந்தியா நிறுவனம் மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிடும் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் வாசிக்க
ஹயுண்டாய் க்ரேடாவின் புக்கிங் 90,000 என்ற எண்ணிகையை கடந்தது . தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.
ஹுண்டாய் i10 வேரியண்ட்கள் – உங்களுக்கானதை நீங்களே தேர்ந்தெடுங்கள்