2015 ஆம் ஆண்டு விற்பனையில் ஹயுண்டாய் நிறுவனம் - புதிய சாதனையை நோக்கி
புது டெல்லி:
ஹயுண்டாய் இந்தியா நிறுவனம் 2015 ஆம் ஆண்டு விற்பனையில் புதிய சாதனையை நிகழ்த்தும் என்று தெரிகிறது. சமீபத்தில் வெளியான இந்நிறுவனத்தின் க்ரேடா கார்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 2015 ஆம் ஆண்டு 4.65 லட்சம் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்த ஹயுண்டாய் , ஏற்கனவே அந்த இலக்கை தாண்டி தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி சில நாட்கள் இன்னமும் எஞ்சி உள்ள நிலையில், 4.76 லட்சம் ஹயுண்டாய் வாகனங்கள் இந்திய சாலைகளில் ஏற்கனவே கம்பீரமாக உலா வரத் தொடங்கி விட்டன. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு, 5 மாதங்களுக்கு முன்னால் இந்நிறுவனம் அறிமுகம் செய்த SUV வாகனமான க்ரேடா பெற்றுள்ள அசாத்தியமான வெற்றியே காரணம் என்று உறுதியாக சொல்லலாம். மேலும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டில் இருந்து தனது தயாரிப்புக்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்பு செய்யப்பட்ட ஆய்வின் படி , ஹயுண்டாய் நிறுவனம் விற்பனையில் புதிய மைல்கல்லை விரைவில் தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
SUV பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள க்ரேடா இதுவரை 92,000 வாகனங்கள் ( 16,000 ஏற்றுமதி ஆர்டர்கள் உட்பட ) புக்கிங் ஆகி உள்ளன. ஒரு நேரத்தில், க்ரேடா SUV வாகனங்களின் வெளிநாட்டு ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்தி விட்டு , அசுர கதியில் பெருகி வரும் உள் நாட்டு ( இந்திய ) தேவைகளை முதலில் பூர்த்தி செய்வோம் என்று ஹயுண்டாய் நிறுவனம் முடிவு செய்தது என்றால் அதன் மூலம் க்ரேடா பெற்றுள்ள அமோக வெற்றியின் முழுமையான வீச்சை நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம். துவக்கத்தில், மாதம் 6,500 க்ரேடா கார்களை தயாரித்தால் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்று ஹயுண்டாய் நிறுவனம் போட்ட கணக்கு தப்பு என்று வெகு விரைவில் அந்நிறுவனம் உணர்ந்து விட்டது. மாதம் 6,500 என்ற எண்ணிக்கையை 7,500 ஆக உயர்த்தியது. இந்த நடவடிக்கையால் வாகனத்தை புக் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைந்தது. இதுவும் ஹயுண்டாய் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயரைப் பெற்று தந்தது.
2015 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் 5.05 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து விட்டு அதனை அடைய முடியாமல் திணறிக் கொண்டிருந்த ஹயுண்டாய் நிறுவனத்திற்கு க்ரேடா கார்களின் அறிமுகமும், அந்த கார் பெற்றுள்ள வெற்றியும் மிகப்பெரிய இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க