ரெனால்ட் கிவிட் காரின் முன்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்கியது
published on ஆகஸ்ட் 27, 2015 09:30 am by manish
- 15 Views
- 9 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில், தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அனைத்து கார் உற்பத்தியாளர்களும் இச்சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள விரும்புவது போலவே, ரெனால்ட் நிறுவனமும் இந்த திருவிழா வேளையை பயன்படுத்திக் கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. தீபாவளி நேரத்தில் திருவிழா கோலம் பூணுவதற்கு, அறிமுக நிலையில் உள்ள சிறிய ரக க்ராஸ் ஓவர் ரகமான தனது கிவிட் காரை அறிமுகப்படுத்த உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நகரங்களில், ரெனால்ட் முகவர்கள் கிவிட் காரின் முன்பதிவை கோலாகலமாக ஆரம்பித்து விட்டனர். வெகு விரைவிலேயே, மற்ற நகரங்களிலும் முன் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் கிவிட் காரின் முன்பதிவு தொகையாக, ரூபாய் 20,000 முதல் ரூபாய் 50,000 வரை பெற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தொகை, விநியோகிஸ்தர்களின் நகரங்களுக்கு ஏற்றார் போல மாறுபடுகிறது.
இந்தியாவில் அறிமுக நிலையில் உள்ள சிறிய ரக க்ராஸ் ஓவர் கார் வகைகளில், ஃபிரெஞ்சு வாகன உற்பத்தியாளர்களின் தயாரிப்பான கிவிட் கார் முதன்மையாக இருக்கும் என்று தெரிகிறது. கிவிட்டின் க்ராஸ் ஓவர் மரபணு, வெறும் வெளிப்புறத் தோற்றத்தில் மெருகேற்றப்பட்ட பிரமாண்டமான புடைப்புடன் நின்று விடாமல், இதன் தரை இடைவெளி (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) 180 மிமீ –ஐக் கொண்டு SUV கார்களின் அம்ஸங்களோடு கம்பீரமாக வருகிறது.
வெளிப்புற தோற்றத்தை பார்க்கும் போது, கிவிட் தனது ஆஜானுபாகமான வடிவமைப்பு, இயல்பு திறனோடு கூடிய சக்கரத்தின் மேல் பகுதியில் உள்ள பென்டர்கள், முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும் முட்டுத் தாங்கி (பம்பர்), புடைப்பான மடிப்புகளுடன் கூடிய மேல் விதானம் மற்றும் கவிகை (பானெட்) மூலமாக அனைவரையும் தன் வசம் கவர்ந்திழுக்கிறது.
ரெனால்ட் கிவிட்டின் உட்புறம், சொகுசான பயணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று தன்னிகரில்லாத காராக வருகிறது. இதன் உள்ளே, டிஜிட்டல் மயமான கருவிகள்; மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர் சாதனம்; விசைகளால் இயக்கப்படும் ஜன்னல்கள் (பவர் விண்டோஸ்); மற்றும் உயர்ந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள குளிர் சாதன துவாரங்களும் (ஏசி வெண்ட்) பொருத்தப்பட்டு பயண வேளையை சுகமாக்குகின்றன. மேலும், உயர்தரமான கார் ரகங்களில் உள்ள இலக்கமுறை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, இந்த காரில் முதன் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, ரெனால்ட் கிவிட்டின் பூட் பகுதியில் உள்ள இடம், இந்த வகை கார் வர்க்கத்தில் மிகவும் சிறந்ததாகவும், அனைவராலும் பேசப்படும்படியும் இருக்கும்.
உட்புறத்தில் உள்ள 6.0 அங்குல இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு USB மற்றும் aux இணைப்புடன் வருகிறது. கிவிட் காருக்கு, ரெனால்ட் நிறுவனம் தலைசிறந்த ஆளியக்கி உட்செலுத்தியுடன் கூடிய 800 cc பெட்ரோல் இஞ்ஜினைப் பொருத்தி உள்ளது. மேலும், AMT –யுடன் கூடிய பெரிய 1.0 லிட்டர் ரக இஞ்ஜினை, பின் வரும் காலத்தில் இந்த நிறுவனம் அமைத்துத் தரும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.
விநியோகஸ்தர்களின் கருத்துப்படி, அநேகமாக வரும் செப்டெம்பர் மாதம் இறுதியிலிருந்து கிவிட் கார் விநியோகங்கள் தொடங்கிவிடும். எனினும், இவை அனைத்தும் யூகங்களே. இந்த காரின் வெளியீட்டு தேதியையோ, விலைப் பட்டியலையோ அதிகாரபூர்வமாக ரெனால்ட் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இதன் விலை அநேகமாக ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சம் வரை (ஷோரூம் விலை) நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.