2015 துபாய் மோட்டார் ஷோவில் மாசெராட்டி நிறுவனம் 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தும்
published on அக்டோபர் 22, 2015 11:34 am by raunak
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாசெராட்டி நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2015 துபாய் மோட்டார் ஷோவில், தனது 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிக்கு வைக்கவுள்ளது. இந்த கான்செப்ட் காரை, சென்ற வருடத்தில் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி, இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று அறிவித்தது. மாசெராட்டி நிறுவனம், அல்ஃபிரி காரைத் தவிர, துபாயின் தேவைக்கு ஏற்றார்போல ஒரு புதிய வாகனத்தையும் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இதை பற்றிய கூடுதல் விவரங்கள் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் வெளிவரும்.
மாசெராட்டி சகோதரர்களில் மிக பிரபலமானவரான அல்ஃபிரி மாசெராட்டி என்பவரின் பெயரையே, இந்த அல்ஃபிரி கான்செப்ட் காருக்கு வைத்துள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பொலோனாவில் “ஆஃப்பிசின் அல்ஃபிரி மாசெராட்டி” என்ற பெயரில், கார் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவிய பெருமை அல்ஃபிரி மாசெராட்டியையே சேரும். தற்போது, இந்த கான்செப்ட் காரின் உருவாக்கத்திற்கு சூத்ரதாரியாக உள்ள லோரென்ஸோ ராமாசிஓட்டி இது பற்றி கூறும்போது, “நாங்கள் கடந்து வந்த 100 இனிமையான ஆண்டுகளின் திருப்பு முனையாக, அல்ஃபெரி காரின் அறிமுகம் இருக்கும். ஒரு சிறந்த எதிர்காலம் எங்களுக்கு முன் திறந்து இருப்பது தெரிகிறது,“ என குறிப்பிட்டு கூறினார்.
அல்ஃபிரி கான்செப்ட் கார், நேர்த்தியான இத்தாலிய ஸ்டைலில் உருவான 2+2 சீட்டர் கொண்ட சிறந்த சுற்றுலா வாகனமாகும். 1954 -ஆம் ஆண்டில் புகழ் பெற்ற பின்னின்ஃபரினா என்ற பிரபல வடிவமைப்பாளர் வடிவமைத்த, எல்லா காலங்களிலும் கவர்ச்சிகரமான காராக திகழ்ந்து வரும், மாசெராட்டி A 6 GCS-53 என்ற மாடலின் அடிப்படையில் இந்த அல்ஃபிரி கான்செப்ட் கார் உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஃபிரியின் வடிவமைப்பாளர்கள், ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தெளிவான மாடலை உருவாக்கியுள்ளார்கள். கீழ் நோக்கி நீண்ட முன்பகுதி, தனித்துவமான கிரில், மிரட்டும் வகையிலான ஹெட்லைட், வீல் வளைவுகளில் அமைந்துள்ள மாசெராட்டி நிறுவனத்தின் பிரத்தியேகமான மூன்று ஏர் டக்ட், பின்புற பில்லரில் பொறிக்கப்பட்ட சேட்டா பாட்ஜ் போன்றவை, இந்த அல்ஃபிரி கான்செப்ட் காரின் முக்கிய சிறப்புகளாகும். இதன் 2+2 சீட் கேபினை மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் வடிவாக்கம் செய்துள்ளனர்.
ஒருசில மாதங்களுக்கு முன்பு மாசெராட்டி நிறுவனம், டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில், மூன்று டீலர்களுடன் இந்திய சந்தையில் மறுபிரவேசம் செய்தது. 2013 -ஆம் ஆண்டு ஷ்ரேயான் குழுவுடன் செய்த கூட்டு உடன்படிக்கை முடிவடைந்ததால், மாசெராட்டி இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. தற்போது, இந்நிறுவனம் குவாட்ரோபோர்டே, கிப்லி, கிரான் டூரிஸ்மோ மற்றும் கிரான் கப்ரியோ ஆகிய கார்களை ரீடைல் செய்கிறது.
மேலும் வாசிக்க:
மாசெராட்டி இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்குகிறது
2016 –யில் லேவாந்தே SUV உற்பத்தி ஆரம்பம் - மாசெராட்டி உறுதி
0 out of 0 found this helpful