2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே ஸ்பின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
தற்போது நடந்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே நிறுவனம் தனது ஸ்பின் MPV வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த வாகனம் மாருதி சுசுகி எர்டிகா , ஹோண்டா மொபிலியோ ஆகிய மற்ற MPV பிரிவு வாகனங்களுடன் போட்டியிடும். செவர்லே நிறுவனத்தின் தற்போது புழக்கத்தில் உள்ள MPV வாகனமான செவர்லே என்ஜாய் வாகனங்கள் டேக்ஸி வாகனமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்பின் MPV வாகனத்தை ஒரு ப்ரீமியம் MPV வாகனமாக செவர்லே பிரகடனப்படுத்துகிறது. இந்திய சந்தையில் 2017ல் இந்த MPV வாகனங்கள் அறிமுகப்படுத்த படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பியட் மூலம் பெறப்பட்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் இந்த ஸ்பின் வாகனங்களில் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 - வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் 90PS சக்தியையும் 200nm அளவுக்கு டார்கையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வருகிறது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட வேரியண்டில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி இணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 7 லட்சத்தை ஓட்டி இருக்கும் என்றும் யூகங்கள் தெரிவிக்கிறது.
கடந்த வருடம் நடந்த ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது , இந்தியாவில் தங்கள் நிறுவன விரிவாக்கத்திற்காக ரூ, 6,660 கோடி முதலீடு செய்ய உள்ளதாக செவர்லே நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த பெரிய அளவிலான முதலீட்டிற்கு பின் இந்தியாவில் செவர்லே நிறுவனம் தயாரித்து வெளியிடும் முதல் வாகனமாக செவர்லே ஸ்பின் MPV வாகனங்கள் திகழப்போவது இங்கே குறிப்பிடத்தக்கது. நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே நிறுவனம் பெரிய எதிர்பார்ப்புக்களுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட செவர்லே க்ரூஸ் கார்களையும் , கமேரோ மற்றும் கார்வெட் கார்களையும் காட்சிக்கு வைக்கும் என்று தெரிகிறது. தங்கள் அரங்கத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் நல்ல ஒரு அனுபவத்தை தரும் விதத்திலும் ஆகுலஸ் ரிப்ட் விர்சுவல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற ஆப் (app) ஒன்றையும் செவர்லே நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது.
இந்த ஆட்டோ எக்ஸ்போவிற்கான தங்களது திட்டங்களை விவரித்த ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கஹேர் காசிம், “ இந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் எங்கள் அரங்கத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் முற்றிலும் புதிய புத்துயிர் பெற்ற செவர்லேவை பார்ப்பார்கள். இந்திய வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள எங்களின் தயாரிப்புக்கள் இந்திய வாகன சந்தையில் நிச்சயம் பேசப்படும் " என்று கூறியுள்ளார்.