2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இசுசூ டி-மேக்ஸ் வி-க்ராஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
modified on பிப்ரவரி 03, 2016 04:49 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இசுசூ நிறுவனம் தனது டி-மேக்ஸ் பிக்அப் டிரக்கைக் காட்சிப்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிக்அப் டிரக், அதிகமான சுமைகளை ஏற்றிக்கொண்டு, எப்படிப்பட்ட மோசமான பாதையையும் எளிதாகக் கடந்து பயணம் செய்ய உதவுவதால் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில், இசுசூ முதலில் தனது Mu-7 என்ற SUV பிரிவு வாகனத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து டி-மேக்ஸ் என்னும் பிக்அப் டிரக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கிள் கேப், ஸ்பேஸ் கேப் பிளாட் டெக் மற்றும் ஸ்பேஸ் கேப் ஆர்ச்ட் டெக் ஆகிய மூன்று விதமான மாடல்களில் டி-மேக்ஸ் வருகின்றது. டாடா ஜெனான் மற்றும் சமீபத்தில் அறிமுகமான மஹிந்த்ராவின் இம்பீரியோ ஆகிய வாகனங்களுடன் இது போட்டியிடுகிறது.
2.5 லிட்டர் 4 சிலிண்டர் இன்டர்கூல்ட் டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் மூலம் புதிய டி-மேக்ஸ் இயக்கப்படுகிறது. மேலும், 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இந்த இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அருமையான இந்த கூட்டமைப்பின் மூலம், 3,600 rpm என்ற அளவு சுழற்சியில், அதிகபட்சமாக 134 bhp சக்தி மற்றும் 1,800 – 2,800 rpm என்ற அளவு சுழற்சியில் அதிகபட்சமாக 320 Nm டார்க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. கனரக சேசிஸ் மற்றும் வலிமையான ஹை-டென்சில்-ஸ்ட்ரெந்த் ஸ்டீலினால் இதன் பாடி ஸ்ட்ரக்சர் அமைக்கப்பட்டுள்ளதால், அதிகபட்ச சுமையாக 1.2 டன்கள் வரை இந்த பிக்அப் டிரக் ஏற்றிச் செல்லும்.
டி-மேக்ஸ் வரிசை வாகனங்களை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பின்னர், இசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திரு. நௌஹிரோ யாமகுச்சி, “எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பலவிதமான ஆப்ஷங்களில் இருந்து அவர்கள் தங்களுக்கேற்ற வாகனத்தைத் தேர்வு செய்யும் வசதியை, புதிய இசுசூ டி-மேக்ஸ் வேரியண்ட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குத் தருகிறோம். இந்தியாவில் கடுமையான வெப்பம் மற்றும் சோர்வைத் தரும் சூழ்நிலைகள் இருப்பதால், இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் தங்களது டிரைவர்களின் சோர்வைக் குறைக்க உதவும் விதத்திலும், அதே சமயத்தில் தங்களது உற்பத்தியை அதிகரிக்கும் நவீன வசதிகளைக் கொண்ட வாகனங்களையே விரும்புகின்றனர். மேலும், எங்களது வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடிய வசதியை உடைய வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும், அவர்கள் அளிக்கும் பணத்திற்கு அதிக மதிப்பைப் பெறவும் டி-மேக்ஸ் கேப்-சேசிஸ் வேரியண்ட் உதவுவதால், இது அவர்களின் சிறந்த துணையாகத் திகழும். எங்கள் நிறுவனத்தின் பிக்அப் வாகனப் பிரிவின் முக்கிய வளர்ச்சிக்கும், தயாரிப்புகளின் விரிவாக்கத்திற்கும் மைல் கல்லாக, டி-மேக்ஸின் அறிமுகம் கருதப்படுகிறது, ஏனெனில், எங்களது வாடிக்கையாளர்கள் சோர்வடையாமல் அதிக பயணங்கள் மேற்கொள்ளவும், சிறப்பான முறையில் செயல்படவும், அதிக பயனடையவும் உதவும் ஒரு சிறந்த வாகனமாக டி-மேக்ஸ் செயல்படும்,” என்று கூறினார்.
மேலும், இசுசூ நிறுவனத்தின் அறிக்கையில், “டிரைவரின் இருக்கைக்குப் பின் அதிகரிக்கப்பட்டுள்ள 1.5 அடி பகுதியில், விலைமதிப்பு மிக்க அல்லது உடையக் கூடிய பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியும் என்பதே டி-மேக்ஸ் டிரக்கின் முக்கியமான சிறப்பம்சமாகும். அது மட்டுமல்ல, இந்த வாகனத்தில் பவர் ஸ்டியரிங், பவர் விண்டோஸ் மற்றும் சென்ட்ரலைஸ்ட் டோர் லாக் போன்ற ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, விவசாயம், சில்லறை வணிகம், பால்பொருள், பொறியியல், உற்பத்தி மற்றும் சிறு தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளின் வர்த்தக வாகனமாக இது செயல்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, ரூ. 15 லட்சங்களைக் கொடுத்து, புதிய டி-மேக்ஸை பிரைவேட் ரிஜிஸ்டிரேசன் செய்து கொள்ளலாம். எனினும், 2016 –ஆம் ஆண்டின் மத்தியில்தான் இந்த வாகனம் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க இந்தியாவில் புதிய நிறுவனத்தை இசுசு உருவாக்குகிறது