தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய மெர்சிடிஸ், டொயோட்டா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள்
published on ஜனவரி 05, 2016 04:14 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுக்க முடியாத டொயோட்டா, மஹிந்திரா மற்றும் மெர்சிடிஸ் ஆகிய வாகன தயாரிப்பாளர்கள், தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளன. டெல்லியில் 2,000cc அல்லது அதற்கு மேல் திறன் கொண்ட டீசல் என்ஜினை கொண்ட தனியார் வாகனங்களை பதிவு செய்ய முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்தே, இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை ஆரம்பத்தில் 3 மாத காலத்திற்கு அமல்படுத்திவிட்டு, அக்கால கட்டத்தில் ஏற்படும் விளைவுகளை பரிசீலித்து, அதற்கு ஏற்ப அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும். இதை தவிர, டெல்லியில் ஓடும் அனைத்து வாடகை வாகனங்களும், வரும் 2016 மார்ச் 31 ஆம் தேதிக்குள் எரிவாயுவிற்கு மாற்ற வேண்டும் என்றும் இந்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்கண்ட 3 கார் தயாரிப்பாளர்களால் தடைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மனுவின் மீதான விசாரணை, நாளை நடைபெறுகிறது.
இந்த தடையின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குனர் பவன் கோயின்கா கூறுகையில், “இந்த வாகனங்கள், அரசினால் நிர்ணயிக்கப்பட்ட எல்லா விதிமுறைகளுக்கும் ஏற்ற முறையில் இருந்தும், டீசல் மட்டும் ஏன் ஒரு குற்றவாளியை போல பார்க்கப்படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. ஒரு பகுதியின் எல்லா விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு தயாரிப்பு இருக்கும் நிலையில், அதற்கு எப்படி தடை விதிக்க முடியும்? இது போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கும் முன் வாகன தொழிற்துறை பிரதிநிதிகளிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இதனால் டீலர்ஷிப்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை நாங்கள் என்ன செய்வது என்று தெரிவில்லை. எனவே இதில் விரைவில் ஒரு தெளிவு ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.
இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சொசைட்டி ஆப் இண்டியன் ஆட்டோமொபைல் மேனிஃபேச்சர்ஸ் – Siam) பொது செயலாளர் விஷ்ணு மாத்தார் கூறுகையில், வாகன தொழிற்துறை என்பது ஒரு மிருதுவான இலக்கு. கடந்த பல ஆண்டுகளாக, நீதிமன்றங்கள் என்னென்ன வேண்டுகோள்களை முன்வைத்தோ, அவற்றை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் ஒரு முழுமையான திட்டத்தை கொண்டுவராத வரை, இதில் எந்த புலப்படும் தீர்வுகளும் ஏற்படப் போவதில்லை” என்றார்.
இந்த தடை உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை சேர்ந்த மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் மனுவை தாக்கல் செய்துள்ளன. மெர்சிடிஸ், ஏறக்குறைய தனது SUV-களின் முழு வரிசையையும் இழந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம், தனது ஸ்கார்பியோ, XUV500, பெலேரோ ஆகிய கார்களை இழக்கிறது. டொயோட்டாவிற்கு தனது இரு சிறந்த விற்பனையை அளிக்கும் கார்களான ஃபார்ச்யூனர் மற்றும் இனோவா ஆகியவை, 2 லிட்டருக்கு அதிகமான திறனை கொண்ட டீசல் என்ஜினை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க