ஆட்டோ எக்ஸ்போ 2016 – மிகப்பெரியதாகவும், மிகச்சிறப்பானதாகவும், மிகப்பிரம்மாண்டதாகவும் இருக்கும்
உத்திரப்பிரதேசத்தில் உள்ள க்ரேட்டர் நொய்டாவில், இந்தியாவின் மிகப் பெரிய வாகன கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ 2016 நடக்கப்போவதால், அதற்குரிய ஆயத்தங்கள் முழு வீச்சில் நடந்தேறிக் கொண்டிருக்கிறன. இது, ஆட்டோ எக்ஸ்போவின் 13 –ஆம் வருட கண்காட்சியாகும். 2016 பிப்ரவரி மாதம் 5 -ஆம் தேதியிலிருந்து 9 -ஆம் தேதி வரை, இந்நிகழ்ச்சி நொய்டா எக்ஸ்போ சென்டரில் நடைபெரும். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளைக் குறித்து கலந்தாலோசிக்க, இதன் பூர்வாங்க கூட்டம் சென்ற செவ்வாய் கிழமை நடைபெற்றது.
1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதலே, இந்த கண்காட்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, பிரகதி மைதானத்தில் (2014 வரை கண்காட்சி நடத்தப்பட்ட இடம்) இடம் போதாததால், இந்த வருடத்தைய மிகப்பெரிய வாகன கண்காட்சி, க்ரேட்டர் நொய்டா எக்ஸ்போசிஷன் மார்ட்டில் நடக்க உள்ளது. மேலும், வாகன உபகரண கண்காட்சி (ஆட்டோ காம்பனன்ட் எக்ஸ்போ) புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சிக்கான அனுமதி சீட்டுகள் வலை தளங்களில் கிடைக்கும்.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க (SIAM) அதிகாரிகளின் குறிப்பின்படி, இந்த வருடத்தில் நாற்பதிற்கும் மேலான வாகன உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை காட்சிக்கு வைப்பர். மேலும், பதினெட்டிற்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளர்கள், மின்சார வாகனங்கள் உட்பட தங்களது அனைத்து விதமான வாகனங்களையும், காட்சிக்கு வைப்பர்.
GNIDA –வின் அதிகாரிகளின் குறிப்பின்படி, இந்த பூர்வாங்க கூட்டத்தில், இந்திய கண்காட்சி மார்ட் லிமிடெட் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களான SIAM மற்றும் ACMA (இந்திய ஆட்டோமொட்டிவ் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம்) அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இது தவிர, இந்திய தொழில் கூட்டமைப்பும் (CII) இந்த கண்காட்சி நடத்துவதில் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த கூட்டத்தின் போது, நொய்டாவில் உள்ள ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ நிலையங்களிலிருந்தும், தில்லி NCR பகுதியின் பல இடங்களிலிருந்தும், இந்த கண்காட்சிக்கு சிறப்பு இலவச பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்வது பற்றி அதிகாரிகள் விவாதித்தனர். இது தவிர, சாலை ரோந்து பணிகள், தீயணைப்பு பணிகள் மற்றும் பிற உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த கண்காட்சிக்கான இடம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுவிட்டது, என்று SIAM அறிவித்தது. GNIDA பொது மேலாளரான ராஜீவ் தியாகி இது பற்றி கூறும் போது, “சென்ற வருடம், இந்த நிகழ்ச்சி 46,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்தது. ஆனால் இந்த முறை, அதை விட 7,000 சதுர மீட்டர் அளவு அதிகரித்த போதிலும், முழுமையாக அனைத்து இடங்களும் ஏற்கனவே விற்று விட்டன,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சென்ற வருடத்தைய கண்காட்சியில், 26 உலகளாவிய மற்றும் 44 இந்திய வாகனங்களின் அறிமுகங்கள் நடைபெற்றன. சென்ற முறை, 200 –க்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களும்; 300 –க்கும் மேற்பட்ட கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. எனவே, இந்த கண்காட்சி மூலம், சுமார் 34,000 வணிக ரீதியிலான வினவல்கள் உருவானது. இதற்கு முந்தைய கண்காட்சிகளை விட இது மிக அதிகமாதலால், புதிய சாதனையாக குறிக்கப்பட்டது.