இருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம், முதல் முறையாக பஜாஜ் க்யூட் RE 60 என்னும் க்வாட்ரிசைக்கிளைத் (சிறிய ரக 4 சக்கர வாகனம்) தயாரித்து வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த வாகனம், மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. புதிய RE60 நான்கு சக்கர வாகனம், இந்த முறை ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில், சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டதால், இதன் அறிமுக தேதி மிக அருகில் வந்து விட்டது என்று தெரிகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் உலக சந்தையில் இந்த வாகனத்தை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை. க்யூட் RE60 வாகனத்தின் தயாரிப்பு முழுமையடைந்துள்ளதை, வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பிரத்தியேக புகைபடங்கள் தெளிவாக காண்பிக்கின்றன. தற்போது ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களில் உள்ளதைப் போல, இந்த குட்டி கார் பலவித கலர் ஆப்ஷங்களில் வரும். சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் நாம் இந்த வாகனத்தின் நீலம் மற்றும் சிகப்பு நிறங்களை மட்டுமே பார்க்க முடிந்தாலும், இந்த இரண்டு நிறங்களுடன் நிறுத்தி விடாமல், பலவித கலர் ஆப்ஷங்களுடன் இந்த கார் வெளியிடப்படுவது உறுதி. ஏனெனில், இதற்கு முன்பு வேவு பார்க்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தில், அழகிய மஞ்சள் வண்ணத்தில் க்யூட் RE60 வெளியானதை நாம் மறக்க முடியாது.