இந்திய சந்தையை கலக்கப்போகும் அடுத்த டாப் 5 காம்பாக்ட் SUV/க்ராஸ்ஓவர் கார்கள்

modified on ஜனவரி 20, 2016 02:25 pm by saad

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உலகின் முக்கிய வாகன சந்தையாகக் கருதப்படும் இந்திய சந்தையில், கடந்த 3 - 4 வருடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக, இந்தியாவில் தற்போது SUV மழை பொழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு, SUV/ க்ராஸ் ஓவர் மாடல்களின் சந்தையில் மாபெரும் முன்னேற்றம்  நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டில் வாழும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்பதை, இந்த மாற்றம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கடந்த காலங்களில், ஒரு சில வசதி படைத்தவர்களிடம் மட்டுமே பெரிய வகை கார்களை வாங்குவதற்கான சக்தி இருந்தது. ஆனால் தற்போது இந்தியர்களின் கார் வாங்கும் திறனானது, பணக்காரர்கள் என்ற குறுகிய வட்டத்தை கடந்து, பலதரப்பட்ட மக்களிடம் படர்ந்து, இதன் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதே உண்மை.

தற்போதுள்ள மொத்த கார் விற்பனையின் பெரும்பகுதியை, காம்பாக்ட் SUV/ க்ராஸ்ஓவர் வகை கார்கள் தங்கள் வசம் தக்க வைத்துள்ளன. நாளுக்கு நாள் SUV/ க்ராஸ்ஓவர் கார் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இந்த பிரிவு சரசரவென்று வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த காம்பாக்ட் SUV பிரிவில் புதிய சப்- காம்பாக்ட் என்ற துணை பிரிவு கூடுதலாக சேர்ந்திருப்பதால், ஒவ்வொரு நாளும் போட்டி தீவிரமடைந்து கொண்டே வருகிறது. எனவே, வரவிருக்கும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய காம்பாக்ட் SUV வகை கார்களின் பட்டியலை உங்களுக்காகத் தயாரித்துள்ளோம். மேலும் வாசித்து, முக்கிய விவரங்களைத் தெரிந்து கொண்டு, புதிய SUV வாங்குவதைத் திட்டமிடுங்கள். 

மாருதி விட்டாரா பிரேஸ்ஸா


மிகவும் வேகமாக வளர்ந்து வரும் காம்பாக்ட் SUV பிரிவில் போட்டியிட, மாருதி நிறுவனத்திடம் உள்ள முதல் ஆயுதம் மிகச் சிறப்பானது. டீஸர் விழியாக, அடுத்து வரவுள்ள மாருதியின் புதிய காரைப் பற்றி நமக்கு மேலோட்டமாக தெரிந்திருந்தாலும், ஏற்கனவே இணையத்தில் வெளியான ரகசிய படங்கள் மற்றும் விவரங்கள் காரணமாக, மாருதியின் இந்த புதிய கார் வைரஸ் போல மிக வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஸ்விஃப்ட் மாடலில் உள்ள அதே டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின்கள், புதிய விட்டாரா பிரேஸ்ஸா மாடலிலும் பொருத்தப்படவிருக்கிறது. SUV பிரிவில், ஏற்கனவே கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு சில முன்னணி போட்டியாளர்களை எதிர்கொள்ள, இந்த காரின் உட்புறத்தில், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்குத் தேவையான பலவகை சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இஞ்ஜின் : 1.2 லிட்டர் பெட்ரோல் / 1.3 லிட்டர் டீசல் 

எதிர்ப்பார்க்கப்படும் விலை : ரூ. 6.5 – 9 லட்சம்

பேபி கிரேட்டா


இந்தியாவில், ஹுண்டாய் கிரேட்டா மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம், புத்திசாலித்தனமாக திட்டங்களை செயல்படுத்தும் இந்த கொரிய நாட்டு வாகன தயாரிப்பாளரின் திறன் என்றால் அது மிகை ஆகாது. ‘புதுமையான’ என்ற அர்த்தம் கொண்ட கிரேட்டா காரின் வசீகரமான தோற்றம்; நவீன உட்புற அமைப்பு; பல விதமான இஞ்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் டிரிம் லெவல்கள் ஆகிய அனைத்தும் இணைந்து, ‘இந்த SUV காரை வாங்க வேண்டும்’ என்ற ஆவலைத் தூண்டுகின்றன. கிரேட்டாவின் அபார வெற்றியோடு இது நின்றுவிடுமா என்ன? இத்தகைய மாபெரும் வெற்றியில் திளைத்துள்ள ஹுண்டாய் நிறுவனம் அடுத்ததாக என்ன செய்யப் போகிறது? நல்ல வேளை, ஹுண்டாய் நிறுவனம் இந்த வெற்றியில் மன நிறைவடைந்து விடவில்லை, மாறாக சப்- காம்பாக்ட் பிரிவில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டே இருக்கிறது. ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட், TUV 300 மற்றும் புதிதாக வரவுள்ள மாருதி விட்டாரா பிரேஸ்ஸா ஆகியவற்றை எதிர்கொள்ள சப்-4 மீட்டர் SUV பிரிவில், தனது புதிய தயாரிப்பை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. எலைட் i20 மற்றும் ஆக்டிவ் க்ராஸ்ஓவர் ஆகியவற்றின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்படும். மேலும், இதன் டீசல் இஞ்ஜின் கிரேட்டாவில் உள்ளதாகும்.  
இஞ்ஜின் : 1.4 லிட்டர் டீசல் 

எதிர்ப்பார்க்கப்படும் விலை : ரூ. 7 – 9 லட்சம்

ஹோண்டா BR – V


நமது டாப் 5 பட்டியலில் மூன்றாவதாக, ஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV/ க்ராஸ்ஓவர் இடம்பெறுகிறது. ஏற்கனவே இந்த கார் இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த சந்தையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்த வாகனத்தின் அடுத்த இலக்காக, உலகின் மாபெரும் வாகன சந்தைகளில் ஒன்றான இந்தியா உள்ளது. அடுத்து வரவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில், ஹோண்டா BR-V காட்சிப்படுத்தப்படும். விரைவிலேயே, இது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். ஹோண்டாவின் இந்த புதிய SUV, கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்ட மொபிலியோ MPV மாடல் போல உள்ளது என்பதை மறுக்க முடியாது. மொபிலியோ MPV மாடலில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜினை, ஹோண்டா நிறுவனம் BR- V மாடலிலும் பொருத்தியுள்ளது.  7 நபர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், 7- சீட்டர் SUV/ க்ராஸ்ஓவர் காரையே வாங்கவேண்டும் என்ற முடிவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களையும் இந்த கார் கவர்ந்து இழுக்கும். உண்மையில், இப்போது ஏராளமானவர்கள் 7 பேர் அமர்ந்து செல்லக் கூடிய வாகனத்தையே விரும்புகின்றனர். எனவே, ஹோண்டாவின் வெற்றி உறுதியாகிறது. 
இஞ்ஜின் : 1.5 லிட்டர் பெட்ரோல் / 1.5 லிட்டர் டீசல் 

எதிர்ப்பார்க்கப்படும் விலை : ரூ. 8.5 – 12 லட்சம்

டாட்சன் கோ க்ராஸ்


டாட்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள கோ க்ராஸ் மாடல், எதிர்வரும் ஆட்டோ எக்ஸ்போவின் பிரதான காராக இருக்கும் என்று தெரிகிறது. 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில், உலகிலேயே முதல் முறையாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே, இதன் கவர்ந்திழுக்கும் தோற்றம் உலகத்தை கிறங்கடித்தது உண்மை. ஒரு சில மாற்றங்களைத் தவிர, இதன் தயாரிப்பு வெர்ஷன் அப்படியே கான்செப்ட் வெர்ஷனை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கும் என்று தெரிகிறது. டாட்சன் காரின் உட்புற அமைப்பு பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை என்றாலும், ரம்மியமான அம்சங்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. டாட்சன் கோ பிளஸ் மாடலின் தொழில் நுட்பத்திலேயே புதிய கோ க்ராஸ் மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மட்டுமல்ல, கோ பிளஸ்ஸில் இடம்பெற்றிருக்கும் இஞ்ஜினும் இதில் இடம்பெரும் என்று யூகிக்கப்படுகிறது. இந்தியாவில், டாட்சன் நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் காராகத் திகழவிருக்கிற கோ க்ராஸ் மாடல், 5 & 7 சீட்டர் என்று இரண்டு வகைகளில் அறிமுகமாகவுள்ளது. ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மாடல் இதன் முக்கிய போட்டியாளராக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இஞ்ஜின் : 1.2 லிட்டர் பெட்ரோல்  

எதிர்ப்பார்க்கப்படும் விலை : ரூ. 5.5 – 7.5 லட்சம்

டாட்டா நெக்ஸான்


காம்பாக்ட் SUV பிரிவில், டாடா நிறுவனத்தின் பங்கு என்பது இதுவரை பெரிதாக இல்லை. வாகன சந்தையில் தனது உயர்ந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால், உடனடியாக டாடா வித்தியாசமான முயற்சி எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே, இந்த நிலையை சமாளிக்க, ஒரு புதிய SUV காரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த வாகன தயாரிப்பாளரான டாடா நிறுவனத்தின் அடுத்த மாபெரும் வெளியீடு, டாடா நெக்ஸான் மாடலாகும். 2014 ஆட்டோ ஷோவில், இந்த காரின் கான்செப்ட் வெர்ஷனை இந்நிறுவனம் வெளியிட்டது. அடுத்த மாதம் நடக்கவுள்ள 2016 ஆட்டோ ஷோவில், இதன் தயாரிப்பு வெர்ஷனை நாம் பார்க்கலாம். இந்தியாவில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது, இந்த கார் உளவாளிகளின் கண்களில் பலமுறை தென்பட்டது. ஜெஸ்ட் காரில் உள்ள அதே டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின்கள் இந்த காரிலும் பொருத்தப்படும். மேலும், AMT ட்ரான்ஸ்மிஷன் இந்த இஞ்ஜின்களோடு இணைக்கப்படலாம் என்று தெரிகிறது. 
இஞ்ஜின்: 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல்/ 1.3 லிட்டர் டீசல்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 6 -8 லட்சங்கள்
மேலும் வாசிக்க 


 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience