2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற் கும் டொயோட்டாவின் அடுத்த தலைமுறை ‘இன்னோவா கிரிஸ்டா’
published on பிப்ரவரி 04, 2016 01:15 pm by saad for டொயோட்டா இனோவா
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டா நிறுவனம், இன்னோவாவின் அடுத்த தலைமுறை மாடலான ‘இன்னோவா கிரிஸ்டா’ காரை, தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. டொயோட்டா நிறுவனம், இந்த காரை இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பு, இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் இன்னோவா மாடல், சந்தையில் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நவீனமான போட்டி கார்களின் மத்தியில், இது சற்றே பழமையானதாகிவிட்டது என்பதே உண்மை.
தற்போது வெளியாகியுள்ள புதிய இன்னோவா கிரிஸ்டாவின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டதாகவும், மேம்பட்டதாகவும் இருக்கிறது. இரண்டு ஸ்லாட்களுடன் கூடிய புதிய கம்பீரமாக அறுங்கோண வடிவில் உள்ள முகப்பு கிரில், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குடன் கூடிய முன்புற ப்ரோஜெக்டர் ஹெட் லைட்ஸ், புதிய ஃபாக் விளக்குகள் மற்றும் புதிய பம்பர்கள் ஆகியவை இதன் தோற்றப் பொலிவைப் பறை சாற்றுகின்றன. கிரிஸ்டாவின் நீள, அகலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு முந்தய மாடலை விட விசாலமானதாக இருக்கிறது. புதிய இன்னோவா கிரிஸ்டா, பழையதை விட150 மிமீ நீளம் கூடுதலாக, தற்போது 4735 மிமீ நீளத்திலும்; 35 மிமீ அளவு உயரம் கூடுதலாக, தற்போது 1795 மிமீ உயரத்துடனும்; 65 மிமீ அதிக அகலத்துடன், தற்போது 1830 மிமீ அகலம் உடையதாகவும் இருக்கிறது. எனினும், இதன் வீல்பேஸ் அதே பழைய 2750 மிமீ என்ற அளவில் இருப்பதால், உட்புற இடவசதி பெரும்பாலும் அதே அளவில் இருக்கும்.
உட்புற அலங்கரிப்பின் தரம், சீரான அமைப்பு மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றில், இன்னோவா தனது பிரிவில் தன்னிகரில்லா மாடலாகத் திகழ்கிறது. MUV பிரிவில் வரும் கார்களின் உட்புற தோற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உட்புற தோற்றத்தின் தரம், சீரான அமைப்பு மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றில், இன்னோவா முடி சூடா அரசனாக திகழ்கிறது என்றால், அது மிகைஆகாது. இத்தகைய பெருமையை, புதிய இன்னோவா கிரிஸ்டா மாடலும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. நவீன இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் இணைக்கப்பட்ட மர வேலைப்பாடுகளுடன் கூடிய டேஷ் போர்டு, மேம்பட்ட எட்டு அங்குல தொடுதிரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு ஆகியன புதிய இன்னோவா கிரிஸ்டாவைப் போட்டியாளர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. கிரிஸ்டா மாடலில், இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், DLNA, வெப் பிரௌசர், ஸ்மார்ட்ஃபோன், ஏர் ஜெஸ்சர் மற்றும் மிராகாஸ்ட் ஆகிய வசதிகளும் இடம் பெறுகின்றன. இவை தவிர, ஆட்டோமாட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர் விண்டோ மற்றும் இலுமிநேஷன் லாம்ப்ஸ் போன்றவை புதிய இன்னோவா கிரிஸ்டாவிற்கு கூடுதல் பெருமை சேர்க்கின்றன.
அடுத்த தலைமுறை இன்னோவா கிரிஸ்டா, புத்தம் புதிய 2.4 லிட்டர் 2GD FTV நான்கு சிலிண்டர் டீசல் இஞ்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இஞ்ஜின் 149 PS சக்தியையும், அதிகபட்சமாக 342 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனுடன் உள்ளது. மேலும், இந்த இஞ்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் அல்லது புத்தம் புதிய சிக்ஸ் ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ற இரு ஆப்ஷன்களுடன் வருகிறது. புதிய இன்னோவா கிரிஸ்டாவின் டாப் எண்ட் வேரியண்ட்டில் 7 ஏர் பேக்குகள் பொருத்தப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல, ABS, EBD, ப்ரேக் அஸ்சிஸ்ட் மற்றும் டுயல் ஏர் பேக்குகள் ஆகியன மற்ற வகை கார்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.
நீண்ட தூர பயணத்திற்கு நம்பிக்கையான வாகனம் என்ற பெருமையை, பத்து வருடங்களாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இன்னோவா, தனது புதிய மாடலிலும் அந்த பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. எந்த வித சிரமங்களும் இல்லாமல் கார் உரிமையாளராக இருக்கும் அனுபத்தைக் கொடுக்கும் டொயொட்டோவின் தனிச்சிறப்பு மற்றும் 7 அல்லது 8 பயணிகள் வசதியாக அமர்ந்து பயணிக்கக் கூடிய இருக்கைகள் போன்றவை இன்னோவாவின் மாபெரும் வெற்றிக்கான காரணங்கள் ஆகும். ஜப்பானிய வாகன தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனத்தின் MUV வரிசையில் வெளியாகியுள்ள புதிய இன்னோவா கிரிஸ்டா, பெரியதொரு வெற்றியை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மட்டுமல்ல, உள்நாட்டு சந்தையில் இந்த நிறுவனத்தின் மதிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நிச்சயமாக கூறலாம்.
மேலும் வாசிக்க