ஹோண்டா பிரியோ

` 4.6 - 7.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹோண்டா ப்ரியோ


ஹைலைட்ஸ்ஜனவரி 28, 2016: ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் தனது புதிய ப்ரியோ RS ஹாட்ச்பேக் காரை இந்தோனேசிய சந்தையில் அறிமுகப்படுத்த ஆயத்தம் ஆகிக் கொண்டிருக்கிறது. தற்போது நமக்கு வந்துள்ள நம்பகமான தகவலின் படி, ஹோண்டாவின் இந்தோனேசிய துணை நிறுவனமான PT ஹோண்டா பிராஸ்பெக்ட் மோட்டார்ஸ், புதிய காரின் பெயரை ப்ரியோ RS என்று பதிந்துள்ளது. எனவே, இந்த மாடல் இந்தோனேசியாவில் மிக விரைவில் அறிமுகமாவது உறுதி. ப்ரியோவின் RS ஸ்பெக் இஞ்ஜின்களில் எந்தவிதமான புது மாற்றங்களும் இல்லை. தற்போதைய ஜெனரேஷன் ப்ரியோவில் உள்ள அதே i-VTEC 1.2 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு 88 PS என்ற அளவு சக்தி மற்றும் 109 Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
ஹோண்டா நிறுவனம் ப்ரியோவை 2011 –ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்தியாவில் வெளியிட்டது. அப்போது, சிறிய கார் சந்தையைப் பிடித்து, தனது விற்பனை அளவை அதிகரிப்பதே ஹோண்டா நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. உண்மையில், ப்ரியோ மற்றும் அமேஸ் என்ற இதன் சேடான் மாடலுடன் இணைந்து வெளியான பின், சிறிய கார்களின் பிரிவில் தலைமை இடத்தில் இருந்த மாருதி சுசுகி மற்றும் ஹுண்டாய் போன்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, இவை மாபெரும் விற்பனை சரித்திரம் படைத்தன. மிகவும் நவீனமான தோற்றத்தில் வரும் ப்ரியோ, 21 –ஆம் செஞ்சுரி மக்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறது என்பது வியப்புக்குரிய விஷயம். தோற்றத்தில் மட்டுமல்ல, விலை, மதிப்பு, இட வசதி மற்றும் சொகுசு வசதிகள் என பலவிதத்திலும் நன்மை பயக்கும் ப்ரியோ முன்னிலையில் இருப்பது ஆச்சர்யம் இல்லை. உண்மையில், இதன் மேல் பொருத்தப்பட்டுள்ள ஹோண்டா சின்னம், இதற்கு மாபெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:


Table 1

ஹோண்டா ப்ரியோ விமர்சனம்


கண்ணோட்டம்ஹோண்டா நிறுவனத்திற்கு இந்திய வாகன சந்தை ஒரு சரியான புகலிடமாக உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும், ஒட்டுமொத்த இந்தியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளன. எந்த மாடலும் இந்திய சந்தையில் சோடை போகவில்லை. ஒவ்வொரு மாடலும் அதிரடியான விற்பனை எண்ணிக்கையைத் தொட்டு, இந்நிறுவனத்திற்கு கொழிக்கும் லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. 5 வருடங்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகம் ஆன ப்ரியோ, தற்போது சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. எனவே, இன்று சாலையில் செல்லும் பொது பெரும்பாலான மக்கள் ப்ரியோவை கட்டாயம் பார்க்க நேரிடுகிறது.
ஹோண்டா ப்ரியோ இந்நிறுவனத்தின் இரண்டாவது ஹாட்ச்பேக் காராகும். இதற்கு முன் வெளிவந்த ஹோண்டா ஜாஸ் காரும் சர்வதேச புகழ் பெற்ற காராகும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. இலகுவான ஸ்டியரிங் அமைப்பு கொண்ட இந்த கச்சிதமான காம்பாக்ட் காரில், கூடுதலாக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நகரத்திற்குள் பயணிக்கும் போது, இதன் செயல்திறன் மெச்சும்படி உள்ளது. வித்தியாசமான மற்றும் கத்திதமான வடிவமைப்பில் வருவதால், இதற்கு முன் வெளிவந்த அனைத்து கார்களை விடவும் கவர்ச்சியாக உள்ளது. நாம் ஒவ்வொரு காரையும் அலசி ஆராய்வதால், இதன் உண்மையான பண்புகள் என்ன, நமக்கு என்ன நன்மைகளைத் தருகிறது மற்றும் எந்த பகுதியை மேலும் மேம்படுத்தி இருக்கலாம் என்பதைப் பற்றிய விரிவான விவரங்களை உங்களுக்காக இங்கே எடுத்துரைக்கிறோம்.

சாதகங்கள்:1. ப்ரியோவைக் கையாள்வது எளிதாக உள்ளது.
2. ஏராளமான முக்கிய சொகுசு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பாதகங்கள்:1. கேபின் பகுதி சிலருக்கு சிறியதாகவும், குறுகலாகவும் தெரியலாம்.
2. பெரும்பான்மையான நல்ல சிறப்பம்சங்கள் அனைத்தும் அடிப்படை டிரிம்களில் இணைக்கப்படவில்லை.

தனித்துவமான அம்சங்கள்:


1. ரேடியோ அமைப்பு, MP3, USB, AUX-இன் மற்றும் பல வசதிகள் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஹோண்டா ஆடியோ சிஸ்டம் இடம்பெறுகிறது.

விமர்சனம்


ப்ரியோ RS மாடலில் பொருத்தப்பட்டுள்ள செயல்திறன் மிகுந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட 1.2 லிட்டர் i-vtec பெட்ரோல் மோட்டார் ஸ்டார்ட் செய்த ஒரு சில வினாடிகளில் 3 இலக்க வேகத்தை எட்டி, நாள் முழுவதும் அதே வேகத்தில் பயணிக்க உதவுகிறது. ஹோண்டா நிறுவனம், ஜாஸ் ஹாட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருந்த அதே மோட்டோரை ஒரு சில மாற்றங்கள் செய்து இதில் பொருத்தி உள்ளது. இதன் மூலம் இதன் எரிபொருள் சிக்கன திறனை அதிகரித்து, ARAI அங்கீகரிக்கும் 19.4 kmpl மைலேஜ் தருகிறது. இந்த இஞ்ஜினின் திறனுக்கு இணையான கட்டுமானமும், பாதுகாப்பு அம்சங்களும் இணைந்து இந்த காருக்கு தனி முத்திரையைத் தருகின்றன. வெளிப்புறம் இருந்து பார்க்கும் போது, நமக்கு இதன் டிசைன் புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது, ஆனால் ஒரு சிலருக்கு இதன் புத்தம் புதிய தோற்றம் வித்தியாசமாகத் தோன்றலாம். குரோம் வேலைப்பாடு, கருப்பு நிற ஜன்னல் விளிம்புகள் மற்றும் நேர்த்தியான வளைவுகள் போன்ற ஆடம்பர அம்சங்கள் இதற்கு மெருகூட்டுகின்றன. அதே போல, உட்புற அம்சங்களும் மனதை வருடும் அளவிற்கு இதமாக உள்ளன. உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் பொருட்களின் தரம் ஆகியவை இந்த காரின் உண்மையான தரத்தைப் பிரதிபலிக்கின்றன. ஹோண்டா ப்ரியோ RS மாடலின் உயர்தர வேரியண்ட்களில் நீங்கள் மேலும் கூடுதலான சிறப்பம்சங்களை அனுபவிக்கலாம்.

வெளிப்புறத் தோற்றம்


ஹோண்டா ப்ரியோ சிறிய மற்றும் கச்சிதமான தோற்றத்தில் வந்தாலும், இதற்கு பந்தய காரின் தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள சக்கர வளைவுகள், சீரான பாடி லைன்கள் மற்றும் துடுக்கான தோற்றம் ஆகியவை இணைந்து இந்த ஹாட்ச்பேக் காருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. முன்புறம் இருந்து பார்க்கும் போது கவர்ச்சியான தோற்றத்தில் வரும் ஹோண்டா ப்ரியோ RS, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் முகப்பை விட அகலமாக உள்ளது.


முன்புறத்தில் உள்ள கிரில் பகுதி க்ரோம் பட்டைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே ஹோண்டாவின் பெரிய சின்னம் கம்பீரமாகத் தெரியும் விதத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. கண்ணீர் துளிகள் போன்ற வடிவத்தில் வரும் இதன் ஹெட் லாம்ப் க்லஸ்டர் பகுதியில் ஹாலோஜென் லைட்கள் மற்றும் அனைத்து முக்கியமான லைட்களும் இணைக்கப்பட்டு ஜொலிக்கின்றது.


ஹோண்டா ப்ரியோ RS மாடலின் அகலமான முகப்பின் கீழ் பகுதி, மெல்லிய ஏர் டேமுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. ஏர் டேமின் இரண்டு ஓரங்களிலும் ஃபாக் விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய ப்ரியோவின் பானேட் அமைப்பு முன்புறம் இறங்கி வருவதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இதுவே, இந்த காருக்கு அனைவரையும் ஈர்க்கும் அழகைப் பெற்றுத் தருகிறது. தற்போது வெளிவரும் கார்களில் உள்ளதைப் போல இல்லாமல், புதிய ப்ரியோவின் முகப்பில் கோடுகளோ மடிப்புகளோ இல்லாமல் இருப்பதாலேயே, இது மாசில்லாத அழகுடன் இருக்கிறது என்பது எங்களது கருத்து,


இதுவரையில் பார்த்திராத சக்கர வளைவுகளுடன் இணைந்த ஸ்டைலான சக்கரங்கள், இதன் பக்கவாட்டுப் பகுதிக்குத் தனி மிடுக்கைத் தருகின்றன. உயர்தர வேரியண்ட்டில் அலாய் சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. VX மாடலில் 14 அங்குல அலாய் சக்கரங்களில், 175/65/R14 MRF டயர்கள் பொருத்தப்பட்டிருப்பது, இந்த காருக்கு உயர்தர காலணி அணிவிக்கப்பட்டது போல உள்ளது. கதவுகளில் மெல்லிய மடிப்புகள் நீண்டு செல்வது, புதிய ப்ரியோவின் தோற்றத்திற்கு பொலிவேற்றுவது மட்டுமல்லாமல், இதன் மொத்த வடிவத்தையும் தற்போதுள்ள மற்ற அனைத்து ஹாட்ச்பேக் கார்களையும் விட நவீனமாக காட்டுகின்றது என்றால் அது மிகை இல்லை.


கதவு கைப்பிடிகள் மற்றும் வெளிப்புற கண்ணாடிகள் ஆகியவை ப்ரியோவின் பாடி நிறத்திலேயே வருவது, பார்ப்பவர்களை வசீகரப்படுத்துகின்றது. பாடி நிறத்தில் வரும் கதவு மீது கருப்பு நிற ஃபிரேம்களைப் பொருத்தியது சிறந்த வடிவமைப்பாளர்களின் வெளிப்பாடாக நமது கண்களுக்குத் தெரிகின்றன.


முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் தெளிவான அம்சங்களுடன் கவர்ச்சிகரமாகத் தோற்றம் அளித்த ப்ரியோ RS மாடலின் பின்புறம், இதற்கு கம்பீரமான கட்டுமஸ்த்தான தோற்றத்தை அளிக்கிறது. பின்புறம் வந்தவுடன் நீங்கள் அந்த வித்தியாசத்தை உணரலாம். இதுவரை எந்த காரிலும் பார்த்திராத வகையில் பின்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.


டெய்ல் கேட் முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டு, இதன் இரு ஓரங்களிலும் டெய்ல் லாம்ப்கள் மற்றும் டெய்ல் கேட் மேல் பகுதியில் ஏரோடைனமிக் ஸ்பாய்லர் என பல வித்தியாசமான அம்சங்களைக் கொண்ட ப்ரியோவின் பின்புறத்தைப் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. பூட் கதவிற்கு கீழே உள்ள இடம் பட்டையாகவும், தடியாகவும் பாடி நிறத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும், பின்பகுதியின் வித்தியாசமான தோற்றத்திற்கு பங்களிக்கிறது.

Table 2 Table 3

உட்புற அமைப்புகள்:


ப்ரியோவின் உட்புற கேபின் பகுதி, எதையும் மறைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு பெரிதாக இல்லை. சிறிய வெளிப்புற அளவை வைத்துப் பார்க்கும் போதே, இதில் பெரிய விசாலமான இடம் இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. மேலும், ஹோண்டாவிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில், உட்புற அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் தரம் இல்லை. விலையைக் குறைப்பதற்காக பல சமரசங்களை இந்நிறுவனம் செய்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது. எனினும், இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அவர்களுக்கு இணையாகவே உள்ளது. தாராளமான இட வசதி மற்றும் சிறந்த தரம் இல்லை என்றாலும், இதில் உள்ள ஓட்டுனர் பகுதியை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும்.


ஐந்து நபர்கள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள உட்புறத்தில், பூட் பகுதி சிறிதாகவே உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பொறியாளர்கள் உட்புறம் உள்ள இடத்தை, பயணிகள் வசதியாக அமர்ந்து பயணிப்பதற்கே செலவிட்டுள்ளனர். பூட் பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும், ஏனெனில் நீங்கள் அதில் உங்கள் பலசரக்கு மற்றும் காய்கறிகள் தவிர, பெரிதாக எதையும் வைத்துவிட முடியாது. உயர்தர வேரியண்ட்களில் இரட்டை வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள உட்புறம், அடிப்படை வேரியண்ட்களில் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே அலங்கரிக்கப்பட்டுள்ளது.


உயர்தர வேரியண்ட்டை கவர்ச்சியான கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் செதுக்கியுள்ளனர். சென்டர் கன்சோல் மற்றும் ஃபுளோர் கன்சோல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய உட்புறத்தின் மேல் பாதியை கருப்பு நிறத்திலும், டாஷ் போர்டு, கிலோவ் பாக்ஸ் பகுதி போன்றவை பீஜ் நிறத்திலும் அமைக்கப்பட்டு, சமச்சீரான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


வட்ட வடிவத்தில் உள்ள இதன் AC துளைகள் சரியான தூர இடைவெளியில் டாஷ் போர்டில் பொருத்தப்பட்டுள்ளன. கன்சோல் பகுதியின் மேல்புறத்தில் ம்யூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு, இருக்கைகள் மற்றும் குளிர் சாதனத்திற்குரிய கட்டுப்பாட்டுக் கருவிகள் கீழ் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளன.


ஃபுளோர் கன்சோல் பகுதியில் சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடமும், பேடில் ஷிப்டர் முன்பு இரண்டு கப் ஹோல்டர்களும் இடம்பெறுகின்றன.


ப்ரியோ RS மாடலின் ஸ்டியரிங் வீல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, ஹோண்டா நிறுவனத்தின் சின்னம் மற்றும் வெள்ளி நிற வேலைப்பாடு ஆகியவை இதற்கு மெருகூட்டும் விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன.


இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரில் டாக்கோமீட்டர், ஸ்பீடோ மீட்டர் மற்றும் பல முக்கிய விவரங்களைக் காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டு, ஓட்டுனரின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளன.


பீஜ் வண்ணத்தில் உள்ள இதன் கதவுகளில், கைப்பிடிகள் அருகே கருப்பு நிற பட்டை ஒன்று உள்ளது. கதவு பகுதியில் ஒரு சில பாக்கெட்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், அவை ஆழமானதாக இல்லை என்பதால் நிறைய பொருட்களை வைத்துக் கொள்ள முடியவில்லை.


காரின் இருக்கையில் அமர்ந்த மறுநொடி, இதன் உள்ளே காற்றோட்டத்திலும் வெளிச்சத்திலும் எந்தக் குறையும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதற்கு முக்கிய காரணம் பீஜ் வண்ணம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பது மற்றும் இருக்கைகளைச் சுற்றிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதும் ஆகும். இருக்கைகளில் தேவையான சப்போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதன் மேல் உள்ள ஹெட் ரெஸ்ட்கள், நெடுந்தொலைவு பயணிக்கும் வேளைகளில் இதம் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கை விரிப்புகள் தரமானவையாக இல்லை என்று நமக்குத் தோன்றுவதைப் போலவே, அதிக ஆடம்பர காரில் பயணிப்பவர்களுக்கும் இது குறைபாடாகத்தான் தோன்றும்.


பவர் விண்டோஸ், ஸ்டியரிங் வீல் மீது ஆடியோ கட்டுப்பாட்டு கருவிகள், புளுடூத் மற்றும் aux-in இணைப்புகள், டி-ஃபாகர்கள், மின்னியக்கம் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய கண்ணாடிகள், கப் ஹோல்டர்கள், சாவி இல்லாமல் புஷ் பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் பல நவீன அம்சங்கள் ப்ரியோ RS மாடலில் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இதில் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு இடம்பெறவில்லை. அதை இணைத்திருந்தால், இந்த காருக்கு ஆடம்பர காரின் தகுதி கிடைத்திருக்கும். அது மட்டுமல்ல, இதில் டெட் பெடலும் பொருத்தப்படவில்லை என்பது ஹோண்டாவின் தவறு என்றே சொல்ல வேண்டும்.

செயல்திறன்:


ப்ரியோ RS மாடலில் SOHC அடிப்படையில் உருவான 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வ்கள் இணைக்கப்பட்டுள்ள இந்த இஞ்ஜின், 1198 cc திறனுடன் வருகிறது. மேலும், இது 6000 rpm என்ற அளவில் 86.8 bhp சக்தி மற்றும் 4500 rpm என்ற அளவில் 109 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதனுடன் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளதால், கியர் மாற்றுவதில் உராய்வு இல்லாமலும், எளிதாகவும் உள்ளது. ஏனைய i-VTEC இஞ்ஜின்களைப் போலவே, இதுவும் சிறப்பாக செயலாற்றுகிறது. 6000 rpm என்ற அளவில் அதிகபட்ச சக்தியை உற்பத்தி செய்வதால், இது எரிபொருள் சிக்கனத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் கார் ஓட்ட விருப்பம் உள்ளவர்களுக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கிறது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு சுகமான அனுபவம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நெரிசலான போக்குவரத்தாகட்டும் அல்லது நீண்ட நெடுஞ்சாலை ஆகட்டும், இரண்டு நிலப்பரப்பிலும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் 1.2 லிட்டர் மோட்டாருடன் இணைந்து சாகசம் புரிகிறது. சீப்பான ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் போல அல்லாமல், இது உராய்வில்லாமல் சீராக இயங்குகிறது. மென்மையாகச் செயல்பட்டாலும் எச்சரிக்கையுடன் விழிப்பாகச் செயல்படுகிறது. எனினும், இதன் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சற்றே நன்றாக இருந்திருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது. நல்ல வேகத்துடன் செயல்படுவதால், த்ரில்லிங் பயணங்கள் மேற்கொள்வதற்கு இது சரியான வாகனமாக இருக்கும். கழுத்தைப் பிடிக்கும் நெரிசலான போக்குவரத்திலும் இரண்டாம் கியரில் இருந்து குறைக்காமல், நீங்கள் வண்டியை செலுத்தலாம். எனவே, இது பெரிய நகரங்களில் பயணிப்பதற்கு வசதியாக உள்ளது. இஞ்ஜின் சத்தம் மற்றும் அதிர்வை நீங்கள் உணரலாம். மிகவும் அதிகமான வேகத்தில் சென்றாள், இஞ்ஜின் சற்றே பதிப்படையலாம் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Table 4

ப்ரியோவின் மைலேஜ்:


ப்ரியோ RS மாடலின் மேனுவல் வேரியண்ட் 18.4 kmpl மைலேஜ் வரைத் தருகிறது என்று ARAI சான்றளித்துள்ளது. 1.2 லிட்டர் i-VTEC இஞ்ஜின் மற்றும் ப்ரியோவின் இலகுவான எடை (920 kg கெர்ப் எடை) போன்ற காரணங்களால்தான் எரிபொருள் சிக்கனத்தைப் பின்பற்ற முடிகிறது. மேலும், இந்த இஞ்ஜின் அதிக மைலேஜ் தருவதற்காக, ஹோண்டா நிறுவனம் உட்புறத்தில் உள்ள ஸ்பீடோமீட்டரில் ECO ஃபங்சன் டிஸ்ப்ளே என்னும் அமைப்பை இணைத்துள்ளது. நீங்கள் எப்போதெல்லாம் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துகிறீர்களோ, அப்போதெல்லாம் இது பச்சை வண்ணத்தில் ஒளிரும். இந்த அமைப்பு ஓட்டுனரின் கவனத்தைச் சிதறடிப்பது போல இருந்தாலும், வியப்பளிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்படுகிறது. மேலும், இந்த அமைப்பின் மென்பொருள், தான் வேலை செய்யத் தேவையான விவரங்களான வாகனத்தின் வேகம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கியர் மற்றும் இஞ்ஜினின் rpm அளவு ஆகியவற்றைத் திரட்டி எரிபொருள் சிக்கனத்தைக் கணக்கிடுகிறது.

சவாரி மற்றும் கையாளும் விதம்:


புதிய ப்ரியோவில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு வருகின்றது. அதே நேரம், இதன் அடிச்சட்டத்தில் மாக் ஃபெர்சன் (McPherson) ஸ்ட்ரட் மற்றும் டார்சன் பீம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆக்ஸில்களிலும் காயில் ஸ்பிரிங்குகள் இணைக்கப்பட்டு, ஓடும்போது இதன் ஸ்திரத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ப்ரியோவில் பயணம் செய்யும் போது, வசதிக்கு எந்த குறைவும் இல்லை என்றே நமக்குத் தோன்றியது. சாலைகளில் உள்ள முரண்பாடுகளை இது எளிதாக சமாளிக்கிறது. அதிகமான வேகங்களிலும், முரட்டுத்தனமான பாதைகளிலும் இதன் ஓட்டம் சற்றே தடைபடுகிறது, ஆனால், இந்தியாவில் தயாராகும் ஒரு சில மாடல்கள் போல கடுமையானதாக இல்லை என்பதே உண்மை. இலகுவான எடையில் உருவான ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த காரின் வேகத்திற்கு இணையாக, துரிதமாக செயல்படுகிறது. உயர்தர வெர்ஷனில் ABS அமைப்பு பொருத்தப்பட்டு, இதன் பிரேக் திறன் பல்மடங்கு அதிகப்படுத்தப்படுகிறது. மேலும், 175 மிமீ அகல டயர்களும் இதன் பிரேக் அமைப்பிற்கு உதவுகின்றன. உண்மையில், பிரேக் அமைப்பில் எந்த குறையையும் நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ப்ரியோவின் இலகுவான எடை மற்றும் கச்சிதமான அமைப்பு ஆகியவை இணைந்து மூலை மூடுக்கெல்லாம் நெளிந்து வளைந்து செல்ல உறுதுணையாக இருக்கிறது.

பாதுகாப்பு அமைப்பு:


ப்ரியோ RS மாடலில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் நமக்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக உள்ளன. ஏனெனில், தற்போது சந்தையில் உள்ள உள்நாட்டில் தயாராகும் வாகனங்களை விட இதில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எமது முதல் பாராட்டு, இதன் உறுதியான ACE பாடி அமைப்பிற்கே. ஏனெனில், இது விபத்தின் போது ஏற்படும் சேதத்தை குரைக்கிறது. இதன் உயர்தர வேரியண்ட்களில் ஆன்டி-லாக் ப்ரேக்கிங் அமைப்பு மற்றும் எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் அமைப்பு ஆகியவை இடம்பெறுவதால், வண்டியை ஓட்டும் போது, வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்புறத்தில் இரட்டை SRS காற்றுப் பைகள் உள்ளன. ஆனால், அவை அடிப்படை வேரியண்ட்களில் காணப்படவில்லை. இவை தவிர, பின்புற விண்ட்ஷீல்ட் டி-ஃபாகர், ஓட்டுனர் சீட் பெல்ட் போடுவதை நினைவூட்டும் கருவிம், காலை/இரவு என இரண்டு வேளைகளிலும் செயல்படும் உட்புற ரியர் வியூ மிரர் மற்றும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாப் லாம்ப் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களாம். நம்பகமில்லாத நபர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கவும், திருட்டைத் தவிர்க்கவும் இதில் இம்மொபிலைசர் பொருத்தப்பட்டுள்ளது. எனினும், இதில் நமக்குக் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இதன் அடிப்படை வேரியண்ட்களில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவில்லை என்பதே.

Table 5

வேரியண்ட்கள்:


புதிய ப்ரியோ RS மாடலில் E, EX, S, V மற்றும் VX என்ற 5 விதமான டிரிம்கள் வெளிவருகின்றன. இவற்றில், அடிப்படை வேரியண்ட்டான E டிரிம்மில், பாடி நிறத்திலேயே பம்பர்கள், மடக்கும் வசதி கொண்ட பின்புற இருக்கைகள், ஓட்டுனர் சீட் பெல்ட் போடுவதை நினைவூட்டும் கருவி, முன்புறத்தில் பவர் விண்டோஸ் அமைப்பு மற்றும் எரிபொருள் நுகர்வு அளவைக் காட்டும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக, EX மற்றும் V என்ற நடுத்தர டிரிம்கள் கூடுதலான தோற்றப் பொலிவு மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவை கொண்டு வருகின்றன. அவற்றில், குரோம் கிரில், பாடி நிறத்தில் ORVM –கள் மற்றும் கதவு கைப்பிடிகள், USB மற்றும் Aux-in வசதி கொண்ட ஒரு DIN ஆடியோ சிஸ்டம், டாக்கோமீட்டர், பின்புறம் பவர் விண்டோஸ், பின்புறம் பார்செல் ஷெல்ஃப் மற்றும் ஆக்செசரி சாக்கெட் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. VX என்ற உயர்தர வேரியண்ட்டில் இந்த மாடல் சீரிஸில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்று ஜெகஜ்ஜோதியாக வருகிறது. இதில் அலாய் சக்கரங்கள், ப்ரீடென்ஷனர்கள் கொண்ட முன்புற சீட் பெல்ட்கள், மின்னியக்கம் மூலம் மடக்கும் வசதி கொண்ட வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் பல இணைக்கப்பட்டு இதை வாங்கவேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்றன.

Table 6

தீர்ப்பு:


இந்திய சந்தையில், டொயோட்டா எடியோஸ் லிவா, ஃபோர்ட் ஃபிகோ, மாருதி சுசுகி ஸ்விஃப்ட், டாடா இண்டிகா விஸ்டா மற்றும் கிராண்ட் i10 போன்ற கார்களுடன் போட்டியிடும் புதிய ப்ரியோ ஒரு நவீனமான வாகனம். எனவே, இது ஒரு சில மக்களை மட்டுமே கவரும் தன்மை கொண்டது. வித்தியாசமான தோற்றம், ஸ்டைலான உட்புற அமைப்புகள் சில அருமையான சொகுசு வசதிகள் மற்றும் பொழுதுப்போக்கு அம்சங்கள் ஆகியவை இதன் பலமாகும். நகர்புறத்தில் பயணம் செய்வதற்கு, ஒரு சிறிய குடும்பத்திற்குத் தேவையான அளவு இட வசதி, பணத்திற்கு ஏற்ற மதிப்பு, எரிபொருள் சிக்கனம், செயல்திறன் மற்றும் நியாயமான விலையில் ப்ரியோ கிடைக்கிறது. மேலும், இவை அனைத்தும், ‘H’ எனும் ஹோண்டாவின் சின்னத்துடன் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. உட்புற அமைப்பு தரமாக இல்லை, சஸ்பென்ஷன் அமைப்பு மேலும் நன்றாக இருந்திருக்கலாம், அடிப்படை வேரியண்ட்களில் பல சிறப்பம்சங்கள் இடம்பெறவில்லை போன்ற ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், அவற்றையும் தாண்டி கச்சிதமான மற்றும் நவீனமான காரை வாங்க வேண்டும் என்பவர்களை இது தன்வசம் ஈர்க்கிறது என்பது உண்மை. அதே சமயம், நீங்கள் உறுதியான, கட்டுமஸ்தான, கம்பீரமான காரை எதிர்பார்த்தால், உங்களுக்கான கார் ப்ரியோ இல்லை என்பது எமது கருத்து.